N

10.4.11

வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்: பிரவீண்குமார்

அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுவதால் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.



தமிழக சட்டசபை தேர்தல் 13 ந் தேதி (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரம் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது: 

தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு 73 சதவீதமும், கடந்த சட்டசபை தேர்தலில் 70 சதவீதமும் பதிவானது. வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தற்போது விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, இந்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எத்தனை சதவீதம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

வாக்குப்பதிவின்போது, பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், பதட்டமான 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வெப் காமிரா மூலம் கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு காட்சியை சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணித்திட முடியும்.

வாக்குச்சாவடிகளை காமிரா மூலம் கண்காணிப்பதால், வாக்குச்சாவடியில் நடப்பது கண்காணிக்கப்படுகிறது என்ற பயம் ஏற்படும். அதோடு ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிட்டால் காமிராவில் பதிவான காட்சியை போட்டுப்பார்த்து உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ள இயலும்.

வாக்குப்பதிவு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இரவே அதாவது 12 ந் தேதி இரவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு போய்விட வேண்டும். ஒவ்வொருவருக்கும் வேறு மாவட்டம், வேறு தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதால் வாக்குப்பதிவு நாளன்று செல்வது கடினம்.

எனவேதான், முந்தைய நாள் இரவிலேயே வாக்குச்சாவடிக்கு சென்றுவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு (மாக் போலிங்) நடத்தப்படும். இதன்மூலம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ஒழுங்காக செயல்படுகிறதா? பொத்தான் சரியாக வேலை செய்கிறதா என்பது பரிசோதித்து உறுதி செய்யப்படும். அதன்பிறகு காலை 8 மணிக்கு முறையான வாக்குப்பதிவு தொடங்கும். இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.