பர்மிங்ஹாம்:இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. முக்கியமான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஸ்டனில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 456 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. அலெஸ்டர் குக், மார்கன் தங்களது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தனர். இவர்களை விரைவில் வெளியேற்ற முடியாமல் நமது பவுலர்கள் திணறினர். காலையில் மழை காரணமாக ஆட்டம் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது. பின் ஆட்டம் துவங்கியதும் குக் கலக்கினார். ஸ்ரீசாந்த் பந்தை 2 ரன்களுக்கு தட்டி விட்ட இவர், டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை எட்டினார். மறுபக்கம் சதம் கடந்த மார்கன்(104), ரெய்னா பந்தில் அவுட்டானார். அமித் மிஸ்ரா சுழலில் போபரா(7), பிரையர்(5) வெளியேறினர்.
அதிரடியாக ஆடிய பிரஸ்னன், இஷாந்த் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து அரைசதம் எட்டினார். தனது “சூப்பர்’ ஆட்டத்தை தொடர்ந்த குக் “டிரிபிள் செஞ்சுரி’ அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவசரப்பட்ட இவர், இஷாந்த் பந்தை தூக்கி அடித்தார். அதனை ரெய்னா பிடிக்க, குக் 294 ரன்களுக்கு அவுட்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை 7 விக்கெட்டுக்கு 710 ரன்கள் என்ற நிலையில் “டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து 486 ரன்கள் முன்னிலை பெற்றது. பிரஸ்னன்(53) அவுட்டாகாமல் இருந்தார்.
அடுத்து, இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு மீண்டும் அதிர்ச்சி அளித்தார் சேவக். கடந்த இன்னிங்ஸ் போலவே தான் சந்தித்த முதல் பந்தில் “டக்’ அவுட்டானார். இம்முறை ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தார். பின் காம்பிர், டிராவிட் இணைந்து பொறுப்பாக “பேட்’ செய்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிட்(18), காம்பிர்(14) அவுட்டாகாமல் இருந்தனர்.
தற்போது இந்திய அணி 451 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமிருப்பதால், நம்மவர்களுக்கு மிகப் பெரும் சவால் காத்திருக்கிறது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.