N

16.12.11

மேற்குவங்காளம்:கள்ளச்சாராய சாவு 143 ஆக உயர்வு: 10 பேர் கைது


கானிங்/கொல்கத்தா:மேற்குவங்காள மாநிலம் தெற்கு பர்கானா மாவட்டத்தில் நேற்று முன் தினம் நிகழ்ந்த கள்ளச்சாராய துயர சம்பவத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.
மூன்று மருத்துவமனைகளில் அவசர சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்ட 70 பேர் நேற்று மரணமடைந்ததை தொடர்ந்து மரண எண்ணிக்கை உயர்ந்தது.
Illegal alcoholஇதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.ஐ.டி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் தற்பொழுது நூற்றிற்கும் மேற்பட்டோர் சிகிட்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோரின் நிலை மோசமாக உள்ளதால் மரண எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி சிவ அதிகாரி அறிவித்துள்ளார்.
மரணித்தவர்களின் உறவினர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் ரூ.10 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்குவார்.
மீதேல் ஆல்கஹாலில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்ததுதான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என போலீஸார் கருதுகின்றனர். இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை இது சீர்குலைத்தது என மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டயமண்ட் ஹார்பர் சப் டிவிசனல் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்ட 327 பேரில் 36 பேர் சம்பவம் நிகழ்ந்த செவ்வாய்க்கிழமை அன்றே மரணித்துவிட்டனர். மீதமுள்ளவர்களை பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்தபோதும் பலருடைய உயிரையும் காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில், கள்ளச்சாராய துயர சம்பவம் மேற்குவங்காள சட்டப்பேரவையிலும் விவாதத்தை கிளப்பியது. அதேவேளையில், கள்ளச்சாராய விற்பனையை தடைச்செய்வது தொடர்பாக முடிவு மேற்கொள்ள உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும், மது வியாபாரத்தை நிறுத்திவிட்டு வேறு தொழில்கள் புரிய மதுபான கடைக்காரர்களுக்கு அரசு உதவி அளிக்கும் என்றும் முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.