N

16.2.11

ரூ.40 விலையுள்ள விசில் ரூ.450க்கு வாங்கினர் தேசிய விளையாட்டு போட்டியில் முறைகேடு


ராஞ்சி : காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் பிரச்னை அடங்குவதற்குள், ராஞ்சியில் நடக்கும் தேசிய விளையாட்டுப் போட்டியிலும் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. ரூ.40 மதிப்புள்ள விசில், ரூ.450க்கு வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த பிரச்னை முடிவதற்குள், தேசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 34வது தேசிய விளையாட்டு போட்டி நேற்றுமுன்தினம் தொடங்கியது. தேசிய விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக ஆர்.கே.ஆனந்த் என்பவர் பொறுப்பு வகிக்கிறார். இவர் தலைமையிலான கமிட்டிதான் விளையாட்டு போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது.

ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்பே, இதில் பல முறைகேடு நடந்துள்ளதை தலைமை கணக்கு தணிக்கையாளர் சுட்டிக் காட்டி உள்ளார். மாநில விஜிலென்ஸ் துறையும் விசாரணையை தொடங்கி உள்ளது. விளையாட்டு போட்டிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கியது, வீரர்களை அழைத்து வந்து செல்ல போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்தது போன்ற பலவற்றில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. விதிமுறைகளை மீறி பல ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை சுட்டிக்காட்டி தணிக்கையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக போட்டி நடுவர் பயன்படுத்தும் தரமான விசில் விலை வெறும் 40 ரூபாய்தான். அதை ரூ.450க்கு வாங்கி உள்ளனர். தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு உணவு சப்ளை செய்ய, டெல்லியை சேர்ந்த ‘காஜல் கேட்டரர்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு கான்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது. ஏல முறையை முற்றிலும் மீறி வழங்கியதால், ரூ.2.8 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டி கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ‘விஸ்கிராப்ட்’ நிறுவனத்துடன் விளையாட்டு போட்டி ஏற்பாடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் முன்பணமாக ரூ.1.73 கோடியை பெற்றுள்ளது. போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்ய இன்னொரு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு கூடுதலாக ரூ.3.47 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தணிக்கையாளர் கூறியுள்ளார். இதுவரை ரூ.11 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், போட்டிகள் முடிந்ததும் விசாரணை தீவிரம் அடையும்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.