N

22.11.11

நிதியமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் ஆஜராக உத்தரவு!


தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், பன்னீர் செல்வர் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டமன்றத்தில் அ.தி.மு.க அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். கடந்த 2006 ஆம் ஆண்டு அவர் மீதும், அவருடைய மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ராஜா, அவருடைய மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி பாலமுருகன், அவருடைய மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைச் சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தேனி மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களில் நடந்து வந்த ஊழல், லஞ்சம் பெறுதல், சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.  இதன் நீதிபதியாக நாகராஜ் நியமிக்கப்பட்டார்.
இதனால் மதுரை உள்பட 4 மாவட்டங்களில் விசாரிக்கப்பட்டு வந்த ஊழல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன.
இந்தநிலையில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் குடும்பத்தினர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருடைய தம்பி பாலமுருகன் மட்டும் நேரில் ஆஜரானார். மற்றவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாகராஜ், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 28 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். "அன்றைய தினம் சட்டத்திற்கு உட்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.