N

5.1.12

மருத்துவர்களின் வேலை நிறுத்தமும் ~ மக்களின் துயரமும்




தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் டி.ஆர்.சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். தூத்துக்குடி இஎஸ்ஐ தலைமை டாக்டர் சேதுலட்சுமி, தனியாகவும் கிளினிக் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கிளினிக்கில் இருந்த போது மகேஷ்(28) என்ற வாலிபர் உள்ளே புகுந்து சேதுலட்சுமியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். போலீசார் விசாரணையில், சேதுலட்சுமியின் கிளினிக்கில் மகேஷின் கர்ப்பிணி மனைவி நித்யா(24) சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நித்யா இறந்தார்.
தனது மனைவி இறந்ததற்கு டாக்டர் சேதுலட்சுமிதான் காரணம் என்று ஆத்திரம் அடைந்த மகேஷ், அவரை கொலை செய்தது தெரிய வந்தது. மகேஷை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும் தமிழகம் முழுவதும் இன்று அரசு மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  நேற்று காலை வழக்கம் போல் காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு டாக்டர்கள் வந்தனர். ஆனால்,  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். கறுப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சென்னையில், ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள், உதவி டாக்டர்கள், முதுநிலை டாக்டர்கள் 200க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் பி.பாலகிருஷ்ணன், சென்னை மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பணிகள் பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவ கல்லூரி டீன் கனகசபை 9 மணிக்கு வந்து டாக்டர்களுடன் சமாதானம் பேசினார். “டாக்டர்கள் தொழில் புனிதமானது. பலரது உயிரை காப்பாற்றும் நாமே போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. இதை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து பிரச்னை ஏற்படுத்த நேரிடும். தமிழக அரசும் சுகாதார துறை அமைச்சரும் பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று உறுதி அளித்துள்ளனர். அதனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனினும் டாக்டர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காலை 7 மணி முதல் 10 மணி வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் டாக்டர்கள் புறக்கணித்தனர். கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் காலை 10 மணிக்கு பிறகு டாக்டர்கள் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்காமல் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை அருகே கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 10 மணி வரை நோயாளிக்கு சிகிச்சை அளித்தனர். அதன்பின் அவசர சிகிச்சை மட்டுமே பார்க்கப்படும் என்று போர்டு எழுதி வைத்துவிட்டு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலை நடந்த தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு டாக்டர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டனர். அதே நேரத்தில் அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள்
மேற்கொள்ளப்பட்டன. மதுரை அரசு மருத்துவமனையில் 500க்கும் அதிகமான டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் இன்று காலை சிகிச்சை பெற வந்த 1000க்கும் அதிகமான
நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவை, நெல்லை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அரசு மருத்துவமனை டாக்டர்கள், 
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். ஒரு சில இடங்களில் தனியார் மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டனர்.டாக்டர்களின் வேலை நிருத்தத்தால் பொது மக்கள் மிகவும் சிரமதிற்குள்ளாயினர்.


0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.