N

8.3.12

பிளஸ் 2 தேர்வு துவங்கியது - தொடர் மின்சாரம் கிடைக்குமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும், இன்று(மார்ச்8) முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கும் நிலையில், தேர்வு முடியும் வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், மின்வெட்டு பிரச்சினையால், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக, பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் என, பல்வேறு தொழில் நிறுவனங்களால், ஜெனரேட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதால், பள்ளிகளுக்கு கிடைக்கவில்லை.
அரசுப் பள்ளிகளில் ஜெனரேட்டர்கள் வசதி, சுத்தமாக கிடையாது. பெரிய தனியார் பள்ளிகளில் மட்டும், ஓரளவுக்கு இந்த வசதிகள் இருந்தாலும், பள்ளி முழுவதிற்கும் மின்சாரம் வினியோகிக்கும் அளவுக்கு, சக்தி வாய்ந்த ஜெனரேட்டர்கள் இல்லை. பல்வேறு இடங்களில் அலைந்தும், ஜெனரேட்டர்கள் கிடைக்கவில்லை என, பள்ளி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

முதல்வர் தலையிட கோரிக்கை: தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின், சென்னை மாவட்டத் தலைவர் ஆதியப்பன் கூறியதாவது: ஜெனரேட்டர் வாங்கிக் கொள்ளுங்கள் என, சாதாரணமாக கூறிவிட்டனர். ஆனால், நடைமுறையில் இந்த உத்தரவு நிறைவேறவில்லை. பள்ளி நிர்வாகிகள் முயற்சித்தும், ஜெனரேட்டர்கள் கிடைக்கவில்லை.
ஏழு அல்லது எட்டு நாட்கள் வரைதான், தேர்வுகள் நடக்கப் போகின்றன. அது வரையாவது, காலை 10 மணியில் இருந்து, பிற்பகல் 1.15 வரை தொடர்ந்து மின்சாரம் வழங்க, முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஆதியப்பன் கூறினார்.
மின் துறை ஒப்புதல்: மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 5,000 பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்கள் தேவை என, பட்டியல் வந்துள்ளது. மின் வாரியத்திற்கு சொந்தமான, 500 ஜெனரேட்டர்களுடன், தனியாரிடம் வாடகைக்கு பெற்று, மொத்தம் 2,000 ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. சில ஜெனரேட்டர்கள் பழுதாகியுள்ளன; அவற்றை சரி செய்யும் பணியில், மின் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மீதமுள்ள 3,000 பள்ளிகளுக்கு, தேர்வு நடக்கும் மூன்று மணி நேரத்தில், மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்க முடிவாகியுள்ளது. இல்லையெனில், பள்ளிகள் இருக்கும் பகுதிகளுக்கு, தேர்வு நேரம் தவிர மாற்று நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்த, முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. மகளுடன் +2 தேர்வு எழுதிய தந்தை

    படிப்பதற்கு வயது ஓரு தடை இல்லை, ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் என்று சீர்காழியை சேர்ந்த சாலை பணியாளர் ஓருவர் நிரூபித்துள்ளார்.

    நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள வேட்டங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). இவர் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் சுபஸ்ரீ தேவி (17), சீர்காழி சியாமளா பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மாரிமுத்து சிறுவயதில் இருந்தே படிப்பில் உரிய கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

    அதன் பிறகு ஆண்டுகள் செல்ல, செல்ல அவருக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இந்த வயதில் படித்தால் ஏளனமாக பார்ப்பார்களே என்று சிறிதும் கவலைபடாமல் ஆர்வத்துடன் இருந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு பிளஸ் 2 தனித் தேர்வராக பங்கேற்க படித்து வந்தார். வரலாறு பாடப் பிரிவை எடுத்து ஆர்வமாக தினமும் கடினமாக உழைத்தார்.

    மேலும் மகள் சுபஸ்ரீ தேவி, பிளஸ் 2 பாடங்களை தனது தந்தை மாரிமுத்துவுக்கு மாலை நேரங்களில் சொல்லி கொடுத்து வந்தார். தேர்வு நாள் நெருங்க நெருங்க மகளுடன் சேர்ந்து மாரிமுத்துவும் ஆர்வத்துடன் பாடங்களை படித்தார்.

    இன்று பிளஸ் 2 அரசு பொதுதேர்வு தொடங்கியது. இதனால் தேர்வை எழுத மகளுடன் மாரிமுத்து இன்று காலை புறப்பட்டார். வழியில் சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு தேர்வை எழுத சென்றனர். மகள் சுபஸ்ரீதேவி சீர்காழி பள்ளியிலும், மாரிமுத்து மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பள்ளியிலும் இன்று பிளஸ் 2 தேர்வை எழுதினர்.


    இதுபற்றி மாரிமுத்து கூறியதாவது: படிப்பதற்கு வயது தடை கிடையாது. படிப்பை யாரும் பாதியில் விட்டு விட வேண்டாம். இன்றைய இûளஞர்கள் படித்தால் தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையமுடியும். நான் பதவி உயர்வுக்கோ, சம்பள உயர்வுக்கோ படிக்கவில்லை.

    கல்வி செல்வம் மட்டுமே வாழ்க்கையில் உண்மையான சொத்து ஆகும் என்றார். கடந்த 2010 ம் ஆண்டில் மகளுடன் மாரிமுத்து 10 ம் வகுப்பு தேர்வு எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது யார்மனதையும் புன்படுத்துவதர்க்காக அல்ல இது தான் தன் நம்பிக்கை என்று உனர வேண்டும் என்பதர்க்காக.

    ReplyDelete
  2. யாரும் தங்கள் படிப்பை விட்டு விட கூடாது...

    ReplyDelete
  3. +2 மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.........

    ReplyDelete

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.