N

7.4.11

இரவில் மின்சாரத்தை தடை செய்யக்கூடாது!


தமிழ்நாட்டில் மின் உற்பத்தி பற்றாக்குறைகாரணமாக சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மின் வெட்டு அமல் படுத்தப்பட்டுள்ளது. தினமும் பகலில் 2 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
சில ஊர்களில் 4 மணி நேரம் வரை கூட மின்தடை நீடிக்கிறது.  கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடந்த போது இரவில் மின் தடை நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் வினி யோகம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
 

பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகவே மின் வெட்டு என்ற பெயரில் வேண்டும் என்றே மின்சாரம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக மின்சார வாரியத்திடம் தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டும், உரிய பதில் கிடைக்கவில்லை. 2009 பாராளுமன்றத் தேர்தலில் நடந்தது போன்று தற்போதும் நிகழ்ந்து விட கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது.

இதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது.   முதல் கட்டமாக இரவு நேரங்களில் எந்த காரணத்தை கொண்டும், மின் சாரத்தை தடை செய்யக் கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஓட்டுப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படலாம் என்று சந்தேகிக்கிறோம். இதை தடுக்க கடைசி 2 நாட்கள் அதாவது 11, 12 தேதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும்.

இந்த 2 நாட்களும் இரவு, பகல் 24 மணி நேரமும் வாகன சோதனை கடுமையாக்கப்படும்.  அதிரடி சோதனைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு அதிகரிக்கப்படும். இதற்கு வசதியாக இரவில் மின் வெட்டு கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே நாளை (வெள்ளி) முதல் தமிழ்நாடு முழுவதும் இரவில் மின்தடை ஏற்படாது. தவிர்க்க முடியாத நிலையில் இரவில் மின்சாரம் தடைபட்டால், உடனடியாக அதை சரி செய்து விரைவில் மின்சாரம் கொடுக்க வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பணம் கொடுக்கப்படுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணப்பட்டு வாடாவை முறியடிக்க கூடுதல் பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் இருந்து கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் வர வழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த அவர்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு படையும் எங்கெங்கு அனுப்பப்படும் என்பது அறிவிக்கப்படும் என்று  கூறினார்கள்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.