N

14.8.11

குஜராத் விஷயத்தில் ப.சிதம்பரம் தலையிடக் கூடாது: பிரதமரிடம் மோடி புகார்


டெல்லி: உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புகார் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நரேந்திர மோடிக்கும், அரசுக்கும் எதிராக பல்வேறு வழக்குகளில் சாட்சி கூறிய முக்கிய அதிகாரிகள் மூன்று பேர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.



10 மாதங்களாக பணிக்கு வராததற்காக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவியில் இருந்து நீக்கினார். பின்னர் கோத்ரா கலவரம் குறித்து விசாரணை நடத்தும் நானாவதி கமிஷனிடம் மோடி குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு   சாட்சியம் அளித்த ஐபிஎஸ் அதிகாரி ராகுல் ஷர்மா நீக்கப்பட்டார். பின்னர் சொராபுத்தீன் வழக்கில் முறையாக விசாரணை நடத்தாததற்காக ஐபிஎஸ் அதிகாரி ரஜ்னீஷ் ராய் நீக்கப்பட்டார்.

கடந்த 2005-ம் ஆண்டு நவம்பரில் குஜராத்தில் சொராபுத்தீனை போலி என்கவுண்டரில் படுகொலை செய்தனர் குஜராத் போலீஸார். சில நாட்களில் அவரது மனைவியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

சொராபுதீன் தீவிரவாதி என்றும், மோடியைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் மத்திய அரசிடம் முறையிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கடந்த 12-ம் தேதி தெரிவித்தார்.

இதையடுத்து முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

ப. சிதம்பரத்தின் இந்த பேச்சு குஜராத் போலீஸ் துறையில் ஒழுங்கற்ற நிலையை ஏற்படுத்த தூண்டுதலாக அமைந்து விடும். இதை கண்டிக்கிறோம். அவர் இதுபோன்று மீண்டும் பேசாமல் இருக்க அறிவுறுத்த கேட்டுக்கொள்கிறேன்.

ப.சிதம்பரத்தின் பேச்சு குஜராத் அரசுக்கு களங்கம் விளைவிப்பது போல் இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குஜராத் மாநில அரசை நிலையற்றதாக ஆக்க முயற்சி செய்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.