N

2.3.12

பெங்களூரில் போலீசார்-நிருபர்கள் மீது வக்கீல்கள் பயங்கர தாக்குதல், வாகனங்களுக்கு தீ: போலீஸ்காரர் பலி!


சுரங்க ஊழல் வழக்கில் இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களையும் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரையும் வழக்கறிஞர்கள் பயங்கரமாகக் தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த போலீஸ் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மொத்தத்தில் 11 போலீசாரும் ஏராளமான பத்திரிக்கையாளர்களும் படுகாயமடைந்தனர்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு எதிரான சுரங்க ஊழல் வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்காக ஹைதராபாத் சிறையிலிருந்து அவர் பெங்களூர் கொண்டு வரப்பட்டார்.

இது குறித்து செய்தி சேகரிக்க நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை பத்திரிக்கையாளர்கள் கூடினர். இதைப் பார்த்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற செயல்பாடுகளை எல்லாம் நேரில் பதிவு செய்து செய்தி வெளியிடக் கூடாது என்று கூறி பத்திரிக்கையாளர்களை விரட்டினர்.

அதையும் தாண்டி அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை வழக்கறிஞர்கள் கல் உள்பட கைக்கு கிடைத்ததை வைத்து தாக்கினர். மேலும் டிவி சேனல்கள் வைத்திருந்த கேமராக்களை பிடுங்கி கீழே போட்டு உடைத்தனர். வழக்கறிஞர்கள் தாக்கியதில் கன்னட டிவி சேனல் ஒன்றின் கேமராமேனின் மண்டை உடைத்து ரத்தம் கொட்டியது. மேலும் பல பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இதில் பெண் பத்திரிக்கையாளர்களும் அடக்கம். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் போலீசாரின் வாகனங்களை வழக்கறிஞர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

அப்போது பிரச்சனையைத் தீர்க்க வந்த போலீசார் மீதும் அவர்கள் கற்கள், சேர்களை வீசினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் வழக்கறிஞர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த தாக்குதலில் டிசிபி ரமேஷ் உள்பட 17 பேர் காயம் அடைந்தார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் கே. ஆர். புரம் கான்ஸ்டபிள் மகாதேவப்பா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் ஒரு கான்ஸ்டபிள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடகத்தில் வழக்கறிஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக பகை உள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சதானந்த கௌடா தெரிவித்துள்ளார். 

பத்திரிக்கையாளர்களை வழக்கறிஞர்கள் ஓட, ஓட விரட்டியடித்து காயப்படுத்திய சம்பவத்திற்கு பிரஸ் கவுன்சில் தலைவர் கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்களை தாக்கிய வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.