எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்துள்ள நிலையில் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள உமர் சுலைமான் தாக்குதலிலிருந்து உயிர் தப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எகிப்தில் கடந்த ௩0 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வரும் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகக் கோரி பொதுமக்கள், எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் புரட்சி செய்து வருகின்றனர். ஆனால் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக மறுத்து வருகின்றார்.
இந்நிலையில் மக்கள் புரட்சியை சமாளிப்பதற்காக சமீபத்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கால் துணை அதிபராக நியமிக்கப்பட்ட உமர் சுலைமான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் அத்தாக்குதலில் உயிர் தப்பியதாகவும் ’ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இத்தாக்குதலில் அவரது மெய்க்காப்பாளர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் , இத்தாக்குதல் பதவி விலக மறுக்கும் முபாரக்கிற்கு ஒரு எச்சரிக்கை ஒலியாக கருதப்படுவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இத்தாக்குதல் எப்போது, எங்கு, எவ்வாறு நடைபெற்றது என்ற தகவல்களோ, துணை அதிபர் எவ்வாறு உயிர் தப்பினார் என்ற தகவல்களோ, தாக்குதலில் பலியான இரு மெய்க்காப்பாளர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த ஒரு வாரமாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த மக்கள் புரட்சியை சீர் குலைக்கும் விதமாக கடந்த சில தினங்களாக அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்கள் என்று தங்களை கூறிக்கொண்ட ஒரு தரப்பினர் புரட்சியில் ஈடுபட்டவர்களுடன் மோதலில் இறங்கியதால் பலர் உயிர் துறந்தனர், ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர். இந்நிலையில் துணை அதிபர் உமர் சுலைமான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி பரவி வருவது அமைதியான மக்கள் புரட்சியை சீர் குலைக்கும் மற்றொரு நடவடிக்கையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.