N

4.2.11

பெரம்பூர் மேம்பாலம் நாளை திறப்பு

 
சென்னை, பிப்.4:பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் கூடுதல் மேம்பாலத்தை முதல்வர் கருணாநிதி  நாளை திறந்து வைக்கிறார்.
.
பெரம்பூர் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் அருகே புதிதாக கூடுதல் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் இந்த கூடுதல் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

508 மீட்டர் நீளமும், 6.3 மீட்டர் அகலமும், 0.9 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதைகளுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல்மேம்பாலத்தை முதல்வர் கருணாநிதி நாளை மாலை திறந்து வைக்கிறார். விழாவிற்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கின்றனர். மாநகராட்சி ஆணையர் முனைவர் த.கார்த்திகேயன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷண் திட்ட விளக்கவுரை நிகழ்த்துகிறார்.

இந்த விழாவில் ரூ.93.11 லட்சம் மதிப்பீட்டில்  முதன் முறையாக இசை நடன நீரூற்றுடன்  அமைக்கப் பட்டுள்ள முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா, சின்னான்டி மடம் மற்றும் எண்ணு>ர் நெடுஞ்சாலையில்  பெட்டக வடிவ பாலங்கள், அடையாறில் கைப்பிடிச் சுவர்கள் பலப்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட திரு.வி.க. பாலம், இந்திரா காந்தி நகரில் புதிய இணைப்பு பாலம் என  நான்கு பாலப் பணிகள், வினோபா நகர், திருவள்ளுவர் நகர், நெல்சன் மாணிக்கம் சாலை என 3 இடங்களில் பூங்காக்கள், 6 உடற்பயிற்சி கூடங்கள், 6 விளையாட்டு திடல்கள், 5 மாநகராட்சி மருத்துவமனைகள், 10 சத்துணவு கூடங்கள், 3 பல்நோக்கு கட்டிடங்கள், 3 கலை அரங்கங்கள் உள்பட  ரூ.23 கோடியிலான 54 வளர்ச்சிப் பணிகளையும் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.

வடசென்னை எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன், வி.எஸ்.பாபு எம்எல்ஏ, துணை மேயர் ஆர்.சத்தியபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.ராமலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சைதை ப.ரவி, நிலைக்குழுத் தலைவர் எஸ்.சுரேஷ் குமார், மண்டல குழுத் தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன் மற்றும் மன்ற உறுப்பினர்கள்  கலந்துகொள்கின்றனர்.

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் கூடுதல் மேம்பாலம் திறக்கப்பட்ட பின்னர் பெரம்பூர் பகுதியில் வாகன நெரிசல் கணிசமாக குறையும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.