N

12.3.11

அ.தி.மு.க. கூட்டணி


அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு 41, மனித நேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சிக்கு 2, சமத்துவ மக்கள் கட்சிக்கு 2, இந்திய குடியரசு கட்சி, பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

ஆனால், கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் இருந்து அ.தி.மு.க. அணியில் இடம்பெற்று வரும் ம.தி.மு.க., 2009 மக்களவைத் தேர்தலில் இருந்து அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.




இந்த மூன்று கட்சிகளுடன் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை. ம.தி.மு.க. சார்பில் 35 தொகுதிகள் கொண்ட பட்டியல் அ.தி.மு.க.விடம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இப்போது 25 தொகுதிகள் என்ற எண்ணிக்கைக்கு ம.தி.மு.க. இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க. தரப்பில் 12 தொகுதிகள் மட்டுமே தர முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


அதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தலா 25 தொகுதிகள் கொண்ட பட்டியலை அ.தி.மு.க.விடம் அளித்தன. ஆனால், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 11 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 தொகுதிகளும் மட்டுமே தர முடியும் என அ.தி.மு.க. கூறுவதாகத் தெரிகிறது. 

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளில் ஒருவர் கூறும்போது, 18 தொகுதிகளைத் தந்தால் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இப்போது நாங்கள் உள்ளோம். எனினும், அ.தி.மு.க. தரப்பில் இருந்து வியாழக்கிழமை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமை அ.தி.மு.க. தரப்பில் இருந்து தொடர்பு கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில், என்ன முடிவெடுப்பது என்பது பற்றி சனிக்கிழமை நடைபெறவுள்ள எங்கள் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகி ஒருவர் கூறும்போது, 15 தொகுதிகள் தந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால், 9 தொகுதிகள் என்று முன்பு கூறிய அ.தி.மு.க. நிர்வாகிகள், அதன் பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. எங்கள் இரு கட்சிகள் இடையே வியாழக்கிழமை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. வெள்ளிக்கிழமை மாலைக்குள் சுமுக முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

ம.தி.மு.க. - அ.தி.மு.க. இடையேயும் வியாழக்கிழமை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ம.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. 

எல்லாத் தேர்தல்களிலும் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என எல்லாவற்றையும் பிற கட்சிகளுக்கு முன்பாகவே முடித்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தில் முதலில் களம் இறங்குவது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வழக்கம்.

எனினும், இந்தத் தேர்தலில் ஏராளமான பிரச்னைகளை சந்தித்த தி.மு.க. அணியிலேயே தொகுதிப் பங்கீடு முடிந்து, தொகுதிகளை அடையாம் காணும் பணிகள் நடக்கும்போது, அ.தி.மு.க. அணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பதே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 

இது அ.தி.மு.க. அணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்களிடம் கடும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.