நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல், ஓட்டுப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு நடத்தப்படுவதால், 92 ஆயிரத்து 451 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேயர், கவுன்சிலர் என, ஒருவர் இரண்டு ஓட்டுகள் போட வேண்டியுள்ளதாலும், அதிகளவு வேட்பாளர்கள் உள்ளதால், ஒரே ஓட்டுச்சாவடியில் நான்கு ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்படுவதாலும், வாக்காளர்கள் உடனடியாக ஓட்டுப் போடுவதில் குழப்பம் ஏற்படும் நிலை உள்ளது.
தமிழகத்தில், 10 மாநகராட்சி மேயர்கள், 125 நகராட்சி தலைவர்கள் உட்பட மொத்தம், ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், வரும் 17, 19ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில், நகர்ப்புற பகுதிகளில் உள்ள மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு, இம்முறை நேரடி தேர்தல் நடக்கிறது.
நகர்ப்புற பகுதிகளில் ஒரு கோடியே 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், ஓட்டுகளை பதிவு செய்யக் காத்திருக்கின்றனர். நகர்ப்புற பகுதிகளில் மட்டும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 80 ஆயிரத்து 500 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என, தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், அ.தி.மு.க.,-தி.மு.க.,-தே.மு.தி.க.,-காங்., -பா.ஜ., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மட்டுமின்றி, சிறிய கட்சிகளும் வேட்பாளர்களைத் தனித்து களமிறக்கியுள்ளன. சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் அதிகளவில் பயன்படுத்தப்படவுள்ளன. 8,789 ஓட்டுச்சாவடிகளில் பேரூராட்சி தலைவர், 8,688 ஓட்டுச்சாவடிகளில் பேரூராட்சி கவுன்சிலர்களுக்கும் என, 30 ஆயிரம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதே போல், 6,909 ஓட்டுச்சாவடிகளில் நகராட்சி தலைவர், 6,903 ஓட்டுச்சாவடிகளில் நகராட்சி கவுன்சிலர்களுக்கு என, மொத்தம் 41 ஆயிரத்து 587 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்காக, 10 மாநகராட்சிகளில் 41 ஆயிரத்து 587 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவ்வாறு மொத்தமாக, 92 ஆயிரத்து 451 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் கமிஷன் திட்டமிட்டதைவிட, 11 ஆயிரத்து 951 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கூடுதலாக பயன்படுத்தப்படும். நகர்ப்புற பகுதிகளில் எட்டு நகராட்சி கவுன்சிலர், இரண்டு பேரூராட்சி தலைவர் உட்பட, 298 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றதால், அங்கு தேர்தல் நடக்கவில்லை. இந்த இடங்களுக்கும் தேர்தல் நடந்திருந்தால், கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், "பெல்' நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர்களால் பரிசோதிக்கப்பட்டு, அதில் வேட்பாளர் பெயர்கள், சின்னங்கள் பதிவு செய்யும் பணிகள் விரைவில் துவங்கும். "தேர்தல் நடக்கும் நாட்களுக்கு ஒருநாள் முன்னதாகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும், "பெல்' நிறுவன தொழில்நுட்ப ஊழியர்கள் வந்து தங்கியிருப்பர். அவசரமாக நீக்க வேண்டிய பழுதுகளை, உடனடியாக நீக்க அவர்கள் உதவுவர். தேர்தல் நாளன்றும் அவர்கள் பணியில் இருப்பார்கள்' என, இது குறித்து கமிஷன் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.ஏற்கனவே, நகப்புறங்களில் ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு ஓட்டுகளை போட வேண்டியுள்ளது. இதனால், இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் வைக்க வேண்டியுள்ளது. ஒரு இயந்திரத்தில் அதிகபட்சமாக, 16 வேட்பாளர்களது பெயர்கள் தான் இடம்பெற முடியும். 16க்கும் மேற்பட்டவர்கள் ஒரே பதவிக்கு போட்டியிட்டால், இன்னொரு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்படும்.
தற்போது, பலமுனைப் போட்டி மற்றும் குட்டிக் கட்சிகள், சுயேச்சைகள் என, இத்தேர்தலில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளதால், பல ஓட்டுச்சாவடிகளில், நான்கு இயந்திரங்கள் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள், உடனடியாக தங்களது ஓட்டுகளை பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும்.ஒரு வாக்காளர் தனது விவரங்களை பதிவு செய்து, ஓட்டுப் போடும் இடத்துக்குச் சென்று, இயந்திரத்தில் எந்த இடத்தில் பெயர் உள்ளது, சின்னம் உள்ளது எனக் கண்டுபிடித்து, மேயர் அல்லது நகராட்சி தலைவர் பதவிக்கு ஒரு ஓட்டும், கவுன்சிலர் பதவிக்கு ஒரு ஓட்டும் போட வேண்டுமானால், குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது ஆகும். இதனால், உடனுக்குடன் ஓட்டுப்பதிவு நடப்பதில் சிரமம் ஏற்படும். மேலும், அதிக நேரம் வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கவும் நேரிடலாம்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.