N

12.10.11

17 மற்றும் 19ம் தேதி பொது விடுமுறை

 உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள 17 மற்றும் 19 தேதிகளை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.  ஒரு லட்சத்து 32401 பதவிகளுக்கான தேர்தல் இது. 57 உள்ளாட்சிகளுக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. மீதி பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 4 லட்சத்து 11,750 பேர் போட்டியிடுகின்றனர்.


அதில் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 4,876 வாக்குச்சாவடிகளில் 20,525 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் முறையாக பயன்படுத்தப்படுகின்றன. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 1.25 லட்சம் போலீசார், ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் போலீசார் மற்றும் வெளி மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.



தலைவர்களும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலோடு, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் திருச்சியில் பிரசாரம் செய்தார். அதை தொடர்ந்து ஜெயலலிதா  13ம் தேதி முதல் 3 நாட்கள் தெற்கு,  மேற்கு மாவட்டங்கள் மற்றும் சென்னையில் பிரசாரம் செய்கிறார். 12 மற்றும் 14ம் தேதிகளில்  கருணாநிதி சென்னையில் பிரசாரம் செய்கிறார்.



தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.



அவர்களோடு வேட்பாளர்களும் வீடு, வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரம் முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. இந்நிலையில், தேர்தல் நடைபெறும் 2 நாட்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:



உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக 17ம் தேதியும், 2வது கட்டமாக 19ம் தேதியும் நடத்தப்படுகிறது. எனவே இந்த இரு தினங்களுக்கும் செலாவணி முறி சட்டம்&1881, விதி 25ன் கீழ் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த தொழிற்சாலைகள், அரசு கட்டுபாட்டில் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு 17ம் தேதி தேர்தல் நடக்கும் பகுதிகளிலும், 19ம் தேதி தேர்தல் நடக்கும் பகுதிகளிலும் பொது விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.