சென்னை : சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் நேற்று மதியம் படகு கவிழ்ந்து, 8 பெண்கள் உட்பட 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். கிறிஸ்துமஸ் விடுமுறையில் படகு சவாரி சென்றவர்களின் சந்தோஷம், சோகத்தில் முடிந்தது. ஆபத்தான பகுதியில் சென்றதால் அலையில் படகு சிக்கி இந்த கோரவிபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறைக்காலம் என்பதால், சென்னை அடுத்துள்ள பொன்னேரி, மீஞ்சூர், கும்முடிப்பூண்டி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காடு பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றனர். புதுக்கும்முடிப்பூண்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன்(64), சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த உறவினர்களுடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றார். பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் மதியம் 2 மணி அளவில் பழவேற்காடு ஏரிப்பகுதிக்கு வந்தனர்.
சுந்தரபாண்டியன் குடும்பத்தினர் 23 பேர் ஒரு மோட்டார் படகில் ஏறினர். அந்த படகு அப்பகுதியில் மீன்பிடிக்கும் படகு. படகோட்டி அன்சாரி, அவரது மனைவி நசீராபானு(20) ஆகியோர் உட்பட 25 பேர் படகில் பயணம் செய்தனர். 7 கி.மீ. தூரம் படகு சென்றது. கடலும், ஏரியும் இணையும் முகத்துவாரப் பகுதி உள்ளது. இதை தாண்டிச் செல்லக்கூடாது; ஆபத்தான பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு படகு வந்து சேர்ந்தது. பிறகு கரைக்கு மீண்டும் திரும்ப தொடங்கினர். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். கடலுக்குள்ளும் சென்று வருவோம் என்று படகில் வந்த சிலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 20 நாட்களாக கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை இருந்தது. இருப்பினும் படகில் சென்றவர்கள், கடலுக்குள் செல்ல தீவிரம் காட்டியுள்ளனர். கடலில் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றம் இருந்தது. மோட்டார் படகு என்பதால் அலையை பொருட்படுத்தாமல் படகை கடலுக்குள் செலுத்தினார் அன்சாரி. அப்போது காற்று பலமாக வீசியது. அலை பெரிதாக உயர்ந்து படகில் மோதியது. இதையடுத்து அந்த படகு கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் அலறினர்.
படகு கவிழ்ந்ததை பார்த்து, கரையில் இருந்த சில மீனவர்கள் உடனடியாக மற்றொரு படகில் விரைந்தனர். அதற்குள் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். 3 சிறுவர்கள் மட்டும் படகில் இருந்த கயிறை பிடித்து கொண்டனர். மீனவர்கள் அவர்களை மீட்டனர். மற்ற 22 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதில் 8 பேர் பெண்கள்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் சென்றது. பொன்னேரி தீயணைப்பு துறையினரும் அங்கு வந்தனர். அவர்கள் அவசரமாக படகு கவிழ்ந்த இடத்துக்கு சென்று அங்கு இறந்தவர்களின் உடலை தேடினர். அதில் சுந்தரபாண்டியன், பாக்கியமணி(50), சுந்தரமேரி(43), அன்சாரி மனைவி நசீராபானு, தங்கராஜி என்பவரின் 6 மாதக் கைக்குழந்தை ஜூலியட் உள்பட 12 பேரின் உடல்களை மீட்டனர். படகோட்டி கைது: படகை ஓட்டிச் சென்ற அன்சாரி கைது செய்யப் பட்டார். அவரிடம் விசா ரணை நடந்து வருகிறது.
படகு விபத்தில் இறந்தவர்கள் விவரம்: புது கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்தவர்கள்:
1. சுந்தரபாண்டியன் (65)
2. ஜெயஜோதி (61)
3. அனிதா (20)
4. ஜெபதுரை (43)
5. சுந்தரமேரி (40)
6. ரோஸ்லின்மேரி ஜெபதுரை (12)
7. நவமணி ஆசீர்வாதம் (40)
8. ஜான்சி (30)
9. மெர்லின் மெர்சியா (9)
10. சார்லி டேனியல் (5)
11. கனகராஜ் (38)
12. பியூலா (35)
13. ஐசக்சாமுவேல் (2)
14. தங்கராஜ் (30)
15. வசந்தா (38)
16. ஜூலியட் நான்சி (6 மாதம்)
17. ஜோஸ்வா (4)
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்:
18. டேனியல் (44)
19. பாக்கியமரி (42)
20. கோயில்ராஜ் (16)
21. மங்கள்ராஜ் (15)
பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர்கள்:
22. நசீராபானு (20)
4 பிரிவாக தேடும் மீட்புக்குழு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி கூறுகையில், ‘8 பிரிவாக படகில் தேடும் பணி நடக்கிறது. முதலில் சென்ற 4 பிரிவினர், 12 உடல்களை மீட்டு வந்துள்ளனர். மேலும் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அந்த உடல்களை மீட்க 4 பிரிவினர் சென்றுள்ளனர். மேலும் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதா என்றும் தேடி வருகின்றனர்’ என்றார்.
சீறிய அலையில் கவிழ்ந்தது படகு
மீட்பு பணியில் ஈடுபட்ட மீனவர் தேசப்பன் கூறியதாவது:
படகு கவிழ்ந்ததை தூரத்தில் இருந்து பார்த்தோம். உடனடியாக வேறொரு படகில் கவிழ்ந்த படகின் அருகில் வந்தோம். அப்போது, கவிழ்ந்த படகில் 3 சிறுவர்கள் ஏறி கொண்டு இருந்தனர். அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தோம். கடலில் ஏற்பட்ட ராட்சத அலையின் காரணமாகவே படகு கவிழ்ந்துள்ளது. சடலங்கள் கண்ணுக்கு தெரிந்தபோதிலும், அலையின் சீற்றம் காரணமாக சடலங்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தப்பிய சிறுவன் கண்ணீர் பேட்டி
படகில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் பால் தினகரன், ஜனோகர் சாமுவேல், பவுல் ராஜ் சிக்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பால் தினரன் கூறியதாவது: படகு கவிழ்ந்ததும் நாங்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டோம். உடனடியாக நானும் எனது சகோதரன் ஜனோகர் சாமுவேல் மற்றும் பவுல் ராஜ் ஆகியோர் படகில் தொங்கி கொண்டிருந்த கயிற்றினை பிடித்து படகின் மேல் ஏறினோம். மீட்பு பணிக்காக படகில் வந்தவர்கள் எங்களை மீட்டனர். படகில் கவிழ்ந்ததால் அனைவரும் மாட்டி கொண்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று கண்ணீர்மல்க கூறினார்.
அமைச்சர், எம்பி ஆறுதல்
பழவேற்காடு அருகே கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் உறவினர் நேற்று அந்த பகுதிக்கு வந்தனர். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காட்டினர். இந்நிலையில், விபத்து சம்பவம் குறித்து அறிந்தததும் பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரமணா, எம்பி வேணுகோபால் ஆகியோர் அங்கு வந்து இறந்தவர்களின் உறவினருக்கு ஆறுதல் கூறினர். திமுக தரப்பில் திமுக மாவட்ட பொருளாளர் சுதர்சனம், ஒன்றியப் பொருளாளர் பாஸ்கர் சுந்தர் ஆகியோரும் ஆறுதல் கூறினர்.
மூன்றாவது விபத்து
விபத்து குறித்து இப்பகுதி மீனவர்கள் கூறியதாவது: வழக்கமாக படகில் 10 பேரை அழைத்து கொண்டு சுற்றுலா செல்வார்கள். சிலர் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு 20க்கும் மேற்பட்டோரை அழைத்து செல்வதுண்டு. அப்படி தான் இந்த படகிலும் 25 பேரை அழைத்து சென்றுள்ளனர். விபத்து நடந்த பகுதி 30 அடி ஆழம் கொண்ட இடம்.
அதிகமாக ஆட்களை ஏற்றிக் சென்றதும், பலமான காற்றும், சீற்றம் மிகுந்த அலைகளும் தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 15 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அதற்கு சில வருடங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சிலரும் இறந்துள்ளனர். இவ்வாறு மீனவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.