N

10.2.12

அரசு காப்பீட்டுத் திட்டத்தில் புதிய விதிகள்!


"தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், அதே சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாத அளவில் விதிகள் கொண்டு வரப்படும்,'' என்று சுகாதார நலத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் துவங்குவதற்கு முன், நோயாளிகளுக்கான தனி அறைகள் மற்றும் படுக்கைகள் குறித்த ஆய்வில், தமிழக சுகாதார நலத்துறை அமைச்சர் விஜய் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவக் கல்வி இயக்குனர் வம்சதாரா, அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் கனகசபை மற்றும் பலர் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின், நடந்த கருத்தரங்கில் விஜய் பேசியதாவது: 
 
தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் முதலாவதாக இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, மருத்துவமனையின் டவர் 2வில் 81 படுக்கைகளும், நரம்பியல் பிரிவில் 20 படுக்கைகளும் தயார் செய்யப்பட உள்ளன.

இந்த மருத்துவமனையில், கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், 1 கோடியே 8 லட்சம் ரூபாய் எஞ்சியுள்ளது. அந்த நிதியில் இருந்து, அறைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மருத்துவக் கருவிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் வாங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

காப்பீட்டுத் திட்ட வார்டுகள் பொது மக்களுக்குத் தெரியும் வகையில், இந்த வார்டுக்கு, "500' என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த எண் பயன்படுத்தப்படும். தனியார் மருத்துவமனையில் இருக்கும் அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

மேலும், அரசு மருத்துவமனையில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் நோயாளி, அதே சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாத வகையில் விதிகள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு, அனைத்து சிகிச்சைகளும் செய்வதன் மூலம், பொதுமக்கள் அரசு மருத்துவமனையை தேடி வருவர்.

ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் விகிதத்தில், நான்கு ஆண்டிற்கு நான்கு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். புதிய காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டைகள் இரண்டு மாதத்திற்குள் வழங்கப்படும்.நோயாளியின் தொகையில் 15 சதவீதம் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைக்கும், 25 சதவீதம் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கும், 60 சதவீதம் சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் ஒதுக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளிலும் அரசு காப்பீட்டுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு விஜய் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.