N

3.3.12

200 நாட்களை தாண்டிய போராட்டம் !


நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் 200 நாட்களை தாண்டியுள்ளது. இதனிடையே, போலீஸ் பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை தமிழக துணை டி.ஜி.பி ஜார்ஜ் கூடங்குளம் வருகைத்தந்து சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மதிப்பீடு ச்செய்தார்.
1998-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடப்பட்டதை தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது.
கடந்த ஆண்டு ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையம் சுனாமியில் சேதமடைந்த போது கூடங்குளத்தில் மக்களிடையே கொந்தளிப்பு உருவானது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி கூடங்குளத்தில் அருகே உள்ள இடிந்தகரையில் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் மக்களின் அச்சம் நீங்கும் வரை அணுமின் நிலையத்தை திறக்கக்கூடாது என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

இப்போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இப்பிரச்சனை மிகவும் பரபரப்பை அடைந்தது.
போராட்டக்காரர்களுக்கு பணம் வருவதாக குற்றம் சாட்டி ஒரு சில கிறிஸ்தவ அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டன. ஜெர்மன் சுற்றுலா பயணியின் மீது குற்றம் சாட்டி அவர் நாடு கடத்தப்பட்டார். இவ்வாறு மத்திய அரசு அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை முடக்க பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி தமிழக அரசு நியமித்த நான்கு உறுப்பினர்களை கொண்ட வல்லுநர் குழுவும் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று அறிக்கை அளித்தது. இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து புகார் அளித்தனர். ஆனாலும், அவர் உறுதிமொழி எதுவும் அளிக்கவில்லை.
இச்சூழலில் வெள்ளிக்கிழமை தமிழக துணை டி.ஜி.பி ஜார்ஜ், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி வரதராஜு ஆகியோர் அடங்கிய உயர் போலீஸ் அதிகாரிகளின் குழு கூடங்குளத்திற்கு வருகை தந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்தனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.