N

5.2.11

வெளிநாடுகளில் 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு? ஆ.ராசாவிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை


புதுதில்லி,பிப்.4: 2ஜி அலைக்கற்றையை முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்றதன் மூலம் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகப் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிடம் மத்தியப் புலனாய்வுக் கழக (சி.பி.ஐ.) அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தினர்.  அவரை விசாரித்தபோது அவருடன் முன்னர் பணியாற்றிய தனிச் செயலாளர் ஆர்.கே. சண்டோலியா, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோரையும் அருகில் வைத்துக்கொண்டனராம்.  இந்த விவகாரத்தில் லஞ்சமாகப் பெறப்பட்ட தொகை சில வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுவிட்டதாகவும் அது தொடர்பான குறிப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றைக் காட்டி விவரங்கள் கேட்டதாகவும் தெரியவருகிறது.  சென்னையையும் வேறு சில நகரங்களையும் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சில நிறுவனங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து அதிகாரிகள் ஆ. ராசாவிடம் கேட்டபோது அவர் மெüனம் சாதித்தார் என்றும் அரசின் கருவூலத்துக்கு வர வேண்டிய 22 ஆயிரம் கோடி ரூபாயை சதி செய்து கொள்ளை அடித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டபோது அவ்வாறு தான் செய்யவில்லை என்று அவர் மறுத்ததாகவும் தெரியவருகிறது.  மேலும் சில அதிகாரிகள் கைது? விசாரணையின்போது சில அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதாகவும் அவர்களையும் கைது செய்ய உரிய தகவல்களும் சான்றுகளும் திரட்டப்படுவதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  முன்னாள் துணைத் தலைமை இயக்குநர்: தொலைத்தகவல் தொடர்புத்துறையின் முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் ஏ.கே. ஸ்ரீவாஸ்தவா மற்றும் அதிகாரி ஆர். கே. குப்தா ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.  அதிகாரிகள் உடந்தை: 2008 ஜனவரி 10-ம் தேதி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான அனுமதிக் கடிதம் வழங்கப்படவிருப்பதை ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் தொலைத்தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அதனால் ஒரு சில நிறுவனங்களால் மட்டும் துறை விதித்த நிபந்தனைப்படி உரிமக் கட்டணத்தைச் செலுத்த முடிந்திருக்கிறது.  வெளிநாடுகளில் முதலீடு: மோரிஷஸ், மடகாஸ்கர், ஐல் ஆஃப் மேன்,ஐக்கிய அரபு அமீரகம், சைப்ரஸ் ஆகிய நாடுகளில் ராசாவுடன் தொடர்புள்ளவர்களால் 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பாகவே இப்போது விசாரணை நடப்பதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ராசாவுக்கும் மற்றவர்களுக்கும் லஞ்சமாக தரப்பட்ட தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிடும் பணியில் சி.பி.ஐ. இறங்கியிருக்கிறது. லஞ்சம் கொடுத்தவர்கள் யார், அவர்கள் அடைந்த பலன் என்ன என்றும் அது விசாரித்து வருகிறது.  ஸ்வான், யூனிடெக் என்ற இரு நிறுவனங்களும் சேர்ந்து கூட்டாக 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்றும் ஸ்வான் நிறுவனம்தான் பின்னாளில் டிபி-எடிசலாட் ஆக மாறியது என்றும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது. ஏ.கே. ஸ்ரீவாஸ்தவாவின் அலுவலகத்திலிருந்துகொண்டுதான் ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் தொழில் அனுமதிக் கடிதத்தை சண்டோலியா அனுப்பினாராம்.  கைது செய்யப்பட்டுள்ள ஆ. ராசா, பெஹுரியா, சண்டோலியா ஆகியோருக்கு எதிராக சாட்சி சொல்ல தொலைத்தகவல் தொடர்புத்துறையைச் சேர்ந்த சில ஊழியர்களை சி.பி.ஐ. எதிர்பார்த்திருப்பதாகவும் தெரியவருகிறது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.