N

5.2.11

எகிப்தில் கொந்தளிப்பு நீடிக்கிறது




எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி நடந்துவரும் ஆர்ப்பாட்டங்கள் வெள்ளியன்றும் நீடித்துள்ளன.
தலைநகரம் கெய்ரோவின் மையப்பகுதியில் உள்ள தக்ரீர் சதுக்கத்தில், கொடிகளை அசைத்தபடியும் தேசபக்திப் பாடல்களைப் பாடியபடியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளனர்.
அரபு லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அம்ரு மூஸா வெள்ளியன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் அச்சதுக்கத்தில் தோன்றியிருந்தார்.
முபாரக் பதவி விலகிய பின்னர் உருவாகக்கூடிய இடைக்கால அரசில் பங்கேற்பது குறித்தும், பின்னர் நடக்கின்ற அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் தான் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எகிப்திய பாதுகாப்பு அமைச்சரும் அச்சதுக்கம் சென்று அங்கு பணியில் ஈடுபட்டுள்ள சிப்பாய்களுடனும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலருடனும் பேசியுள்ளார்.
அமெரிக்கா தகவல்
இதனிடையே எகிப்தில் அதிபர் முபாரக் வசமிருந்து ஆட்சியதிகாரத்தை முறையாகவும் சுமூகமாகவும் கைமாற்றுவது தொடர்பில் எகிப்திய்ப் பிரமுகர்களுடன் தாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்கா கூறுகிறது.
அதிபர் முபாரக் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மூன்று பேர் கொண்ட அரசியல் சாசனக் குழுவிடம் அதிகாரத்தைக் கையளிப்பது என்ற ஒரு யோசனையும் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிகாரிகள் இந்தச் செய்தியை மறுக்கவில்லை என்றாலும், எந்த ஒரு முடிவையும் எகிப்திய மக்களே எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால் எகிப்தின் மேற்குலக கூட்டணி நாடுகள் முபாரக்கிற்கும் எகிப்திற்கும் துரோகம் செய்வதாக ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலர் இப்ராஹிம் கமெல் குற்றம்சாட்டியுள்ளார்.
கமேனி கருத்து
இது ஒரு புறம் இருக்க எகிப்தில் அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சியை அப்பிரதேசத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு தோன்றுவதற்கான அறிகுறி என்று இரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி வருணித்துள்ளார்.
1970களில் இரானில் நடந்த புரட்சியின் எதிரொலிதான் எகிப்தியப் போராட்டங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கைக்கூலி என்று கூறி அதிபர் முபாரக்கை அயதுல்லா கமேனி சாடியுள்ளார்.
முபாரக் பதவி விலகிவிட்டாரென்றால், அப்பிரதேசத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் எகிப்தின் முக்கிய அரசு எதிர்ப்பு அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவம், எகிப்தில் நடப்பவற்றை இரானுடன் ஒப்பிடுவதென்பதை நிராகரித்துள்ளது.
எகிப்திலே நடப்பது இஸ்லாமியப் புரட்சியல்ல, ஆனால் மாறுபடும் மதநம்பிக்கைகளிலும் அரசியல் போக்குகளிலும் சீர்திருத்தம் தேவை என்று வலியுறுத்தும் ஒரு எழுச்சியே என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.