முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை, ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. "ஸ்வான், யுனிடெக் என்ற இரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டியது தொடர்பாக, கேட்கும் கேள்விகளுக்கு ராஜா நேரடியாக பதில் அளிக்கவில்லை, எங்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கவில்லை. ஸ்பெக்ட்ரம் விசாரணையில் என்ன முன்னேற்றம் உள்ளது என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டியுள்ளது' என, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, இந்த அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை நேற்று முன்தினம் சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். அன்றைய தினம் இரவு சி.பி.ஐ., அலுவலக பொறுப்பில் ராஜா வைக்கப்பட்டிருந்தார். ராஜா மட்டுமல்லாது, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா மற்றும் ராஜாவின் தனிச் செயலர் சந்தோலியா ஆகியோரும், இரவு முழுவதும் சி.பி.ஐ., காவலில் வைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டுமென்பதால், நேற்று ராஜாவையும், இரண்டு அதிகாரிகளையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த காலை முதலே ஏற்பாடுகள் துவங்கின. மூன்று பேருக்கும் முதற்கட்டமாக, டாக்டர்களை வரவழைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மூன்று பேரையும், பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்த ஆயத்தமானபோது, சி.பி.ஐ., அலுவலக வாயிலில் மிக அதிக எண்ணிக்கையில் மீடியா நிருபர்கள் குவிந்திருந்தனர். மதியம் 2 மணியளவில் பிரதான வாயில் வழியாக ராஜாவை அழைத்து வந்து காரில் ஏற்ற முயன்றும், முடியவில்லை. அதனால், இன்னொரு வழியில் இருந்த சுவர் ஓரமாக ராஜா அழைத்துச் செல்லப்பட்டு காரில் ஏற்றப்பட்டார். அங்கிருந்து நேராக பாட்டியாலா இல்ல வளாகத்தில் உள்ள கோர்ட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். கோர்ட்டில் நீதிபதி முன்பாக, ராஜாவை கைது செய்ததற்கான காரணத்தை சி.பி.ஐ., வக்கீல் விவரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ராஜா, சித்தார்த்த பெகுரா மற்றும் சந்தோலியா ஆகிய மூன்று பேரும் இந்திய தண்டனை சட்டம் 120பி-ன் கீழ் தவறு செய்துள்ளனர். கூட்டுச் சதி செய்து அரசுக்கு வர வேண்டிய வருமானத்தில் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். தங்களது அரசுப் பதவிகளை தவறாக பயன்படுத்தியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டின்போது ஸ்வான், யுனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக நடந்து கொண்டுள்ளனர். இந்நிறுவனங்கள் பலன் அடையும் வகையில் அரசின் விதிகளை மீறி செயல்பட்டு உள்ளனர். இதனால், அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை நடத்திய விசாரணையில் இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காமல் மழுப்புகின்றனர். எந்த பதிலையும் நேரடியாக சொல்ல மறுக்கின்றனர். சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைக்க மறுக்கின்றனர். இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியும், போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இவர்கள் மூன்று பேரையும் ஒன்றாக சேர்த்து விசாரணை நடத்தியாக வேண்டும். தவிர இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டும் கண்காணித்து வருகிறது. வழக்கு வரும் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள் போதுமான அளவில் முன்னேற்றத்தை காட்டியாக வேண்டும். எனவே, இவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்காக ஐந்து நாட்கள் சி.பி.ஐ., காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு சி.பி.ஐ., வக்கீல் கூறினார்.
இதற்கு ராஜாவின் வக்கீல் ரமேஷ்குப்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நீதிபதியிடம் கூறியதாவது: இந்த கைது சம்பவத்தில் எந்த வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் வரையறை செய்திருந்த, எந்த விதிகளையும் பின்பற்றாமல் சி.பி.ஐ., நடக்கிறது. ரிமாண்ட் ஆவணங்களும் சரிவர காட்டப்படவில்லை. அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் என்று கூறப்படுவது யூகமான தொகையே. இதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடைமுறைகளையும், கொள்கைகளையும்தான் ராஜா பின்பற்றியுள்ளார். தவிர, இதுவரை ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் போது முழுஒத்துழைப்பை அளித்துள்ளார். எனவே, சி.பி.ஐ., காவல் விசாரணை தேவையற்றது. இவ்வாறு ரமேஷ்குப்தா கூறினார். கோர்ட்டில் நடைபெற்ற முக்கால் மணி நேர வாதங்களுக்கு பிறகு இறுதியாக நீதிபதி தனது உத்தரவில், "ராஜா, பெகுரா மற்றும் சந்தோலியா ஆகிய மூன்று பேரையும் ஐந்து நாட்களுக்கு சி.பி.ஐ., தனது காவலில் வைத்து விசாரிக்கலாம்' என்றார். இதையடுத்து, மூவரும் சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கே திரும்பவும் அழைத்து வரப்பட்டனர்.
முடிவானால் திகார் சிறை: ராஜாவை ஐந்து நாட்கள் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள சி.பி.ஐ., தனது தலைமை அலுவலகத்திலேயே அவரிடம் விசாரணை நடத்தும் என, தெரிகிறது. அதன்பின், ராஜா மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார். அப்போதுதான், அவரின் சி.பி.ஐ., காவல் நீட்டிக்கப்படுமா அல்லது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவாரா என்பது தெரிய வரும். சிறை என்று முடிவானால். திகார் சிறையில் அடைக்கப்படுவார். மேலும். அதற்குப்பின் இந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்று வெளிவர அதிக நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. தள்ளுமுள்ளு: ராஜாவை கோர்ட்டுக்கு கொண்டு செல்லும்போது டில்லி போலீசார் மிகவும் திணறிப் போயினர். சி.பி.ஐ., அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், கேமராமேன்கள் குவிந்திருந்தனர். ராஜாவை படம் பிடிக்கும்போது போலீசாருக்கும், நிருபர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பல நிருபர்கள் காயமடைந்தனர். கேமராக்கள் சேதமடைந்தன. அங்கிருந்த பூந்தொட்டிகளும் உடைந்தன. பாட்டியாலா கோர்ட்டிலும் இதே தள்ளுமுள்ளு நீடித்தது.
இரண்டுக்குத்தான் சாதகம், சலுகை: யுனிடெக், ஸ்வான் என்ற இரண்டு நிறுவனங்கள்தான் மிக முக்கியமான குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனங்கள். இவை இரண்டின் பேரைத்தான் நேற்று சி.பி.ஐ.,யும் தெரிவித்துள்ளது. இவை, ராஜாவிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முடிவான விஷயமாகும். இந்த நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதன் மூலம் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பும், மீதியுள்ள பிற நிறுவனங்களை சேர்த்து ரூ.22 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. இதுவரை ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையின்படி, ஸ்பெக்ட்ரம் ஊழலில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு என, கூறப்பட்டது. இது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில், அரசுக்கு எவ்வளவு ரூபாய் நிதி இழப்பு என்பதை முதன்முறையாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. ஆனால், ராஜாவிடம் விசாரணை முடிந்து அதற்கான அறிக்கை தாக்கலாகும் போது, இந்த விவரத்தை எந்த அடிப்படையில் சி.பி.ஐ., முடிவு செய்தது என்று தெரியவரும்.
- நமது டில்லி நிருபர் -
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.