N

6.2.11

சிறிலங்க போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன்

இலங்கையில் தமிழர்கள் எதிராக சிறிலங்க அரசு நடத்திய உள்நாட்டுப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதில் தருகையில் பான் கி மூன் இவ்வாறு கூறியுள்ளார்.

“உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன். அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வாக்குவாதம் நிறைந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு புரிய வைத்தேன். அது எனக்கு நியாயமானதாகத் தெரிந்தது. அந்த நிபுணர் குழு இன்னமும் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்கவில்லை, அது தொடர்பாக சிறிலங்க அரசுடன் பேசி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

எங்கு எது நடந்தாலும் அதற்கான பொறுப்பு யாருடையது என்பதை உறுதி செய்ய வேண்டும். குற்றம் செய்தவர் யாராயிருப்பினும் அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும். அதுவே நீதியின் கொள்கை என்று பான் கி மூன் கூறியுள்ளார்.

“எவ்வாறு அரசியல் நிலைத் தன்மையையும், அரசியல் அதிகாரத்தையும், நீதியையும் ஒரே நேரத்தில் நிலை நிறுத்த முடியும் என்று சிலர் கருதக்கூடும். அரசியல் நிலைத்தன்மை அவசியம்தான், ஆனால் அதோடு நியாயமும் நிலைநிறுத்தப்படவிலையென்றால் அந்த நிலைத்தன்மை நீடிக்காது. அதே நேரத்தில் அரசியல் நிலைத்தன்மை இல்லையென்றாலும் நீதியை நிலை நிறுத்த முடியாது. எனவே அரசியல் நிலைத்தன்மையும், நீதியும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும். அதைத்தான் நான் இலங்கையில் நிலைநிறுத்த முயன்றுக் கொண்டிருக்கின்றேன்” என்றும் பான் கி மூன் பேசியுள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.