N

7.2.11

காமன்வெல்த் சட்ட மாநாடு பிரதமர் தொடங்கி வைத்தார்

ஐதராபாத் : நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு காமன்வெல்த் நாடுகளின் சட்ட மாநாட்டை, ஐதராபாத்தில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில், ‘பொருளாதார வளர்ச்சியும் அதற்கேற்ற சட்டங்களும்’ என்ற தலைப்பில் காமன்வெல்த் நாடுகளின் 17வது சட்ட மாநாட்டை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். மாநாட்டில் காமன்வெல்த் அமைப்பில் உள்ள 53க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாடு ஐதராபாத்தில் 5 நாட்கள் நடக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இந்த மாநாடு நடந்தது. அதன்பிறகு இப்போதுதான் இங்கு நடத்தப்படுகிறது.

மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: வளரும் நாடுகளுக்கு சட்ட ஒழுங்குமுறை மிகவும் அவசியம். பொருளாதார வளர்ச்சிக்கும், அதன் மூலம் கிடைக்கும் பயன் அனைத்து தரப்பினருக்கு சென்றடையவும் இந்த சட்ட ஒழுங்குமுறை உதவ வேண்டும். வரும் நாடுகளுக்கு கண்டிப்பான சட்டம் ஒழுங்கு முறை அவசியம். வளரும் நாடுகளில் வறுமையை ஒழிக்க, பொருளாதாரத்தை பரவலாக்க வேண்டும். அப்போதுதான் வறுமையை ஒழிக்க முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

வேகமாக மாறி வரும் காலத்துக்கு ஏற்ப சட்டங்களும் மாற வேண்டும். சமூகத்தில் ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு நீதிமன்றங்களும் நீதிபதிகளும் பெரும் துணை புரிகின்றனர். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு, கவுரவம், மனித உரிமை ஆகியவற்றை அரசியல் அமைப்பும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

விழாவில், மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, இந்திய தலைமை நீதிபதி கபாடியா, பாகிஸ்தான் தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி உட்பட 10 காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள், ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, காமன்வெல்த் செகரட்டரி ஜெனரல் கமலேஷ் சர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.