அரசு பள்ளிக்கூடங்கள் நக்ஸலைட்டுகளின் பிறப்பிடம் என்று கூறிய வாழும் கலை நிபுணர் என அழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அண்மையில் ஜெய்ப்பூரில் தனியார் ஹிந்தி பள்ளிக்கூட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ரவிசங்கர் கூறியது:
அரசு பள்ளிக்கூடங்களை நடத்துவோரின் முறையற்ற நிர்வாகமும், அசிரத்தையும் குழந்தைகளை சமூகத்தில் தனிமைப்படுத்தி எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்குகிறது. ஆகையால் அரசு, பள்ளிக்கூடங்களை நடத்தவேண்டியதில்லை. நாட்டின் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் அல்லது இதர குழுவினரிடம் ஒப்படைக்கவேண்டும்.
அரசு பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் நக்ஸலிசமும், ஹிம்சா மார்க்கத்தையும் தேர்வுச் செய்கின்றனர். தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் ஒருபோதும் இவற்றால் ஈர்க்கப்படுவதில்லை. அவர்கள் முன்மாதிரி குடிமக்களாக வளருகின்றனர். ஆசிரியர்கள் அவர்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர் என்று ரவிசங்கர் கூறினார்.
ஒரிஸ்ஸா மாநிலத்தில் கடந்த வாரம் இரண்டு இத்தாலி சுற்றுலா பயணிகளை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றது உள்ளிட்ட சம்பவங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டி ரவிசங்கர் இவ்வாறு உரை நிகழ்த்தியுள்ளார்.
ரவிசங்கரின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் ரவிசங்கரின் கருத்தை கடுமையாக கண்டித்து செய்தியாளர்களிடம் கூறியிருப்பது:
ரவிசங்கரின் கருத்து என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நிலையான அறிவு உடையோர் எவரும் இத்தகைய கருத்தை தெரிவிக்கமாட்டார்கள். நான் பயின்றதும் அரசு பள்ளிக்கூடத்தில்தான். ஆனால், நான் நக்ஸல் கொள்கையால் ஈர்க்கப்படவில்லை. முன்னாள் குடியரசு தலைவர்கள் உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும், பிரபல பத்திரிகையாளர்களும், சட்ட வல்லுநர்களும் அரசு பள்ளிக்கூடங்களில் பயின்றவர்கள் ஆவர். இவர்கள் எல்லாம் நக்ஸல்களாக மாறவில்லை என்று கபில் சிபல் கூறினார்.
பீகார் முதல்வர் நிதீஷ்குமார், ராஜஸ்தான் கல்வி அமைச்சர் ப்ரிஜி கிஷோர், பி.யு.சி.எல் நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரும் ரவிசங்கரின் அறிவீனமான கருத்திற்கு கடும் கண்டனத்தை பதிவுச் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.