N

23.3.12

ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம்: பரப்பான இறுதி ஆட்டதில் பங்களாதேஷை வீழ்த்தியது பாக்.


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தியது பாகிஸ்தான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் கோப்பையை வென்றுள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தது. ஆரம்பம் முதலே வங்கதேச வீரர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் நாசிர் ஜம்ஷெத் 9, யூனிஸ் கான் 1, மிஸ்பா உல் ஹக் 13 ரன்களில் வெளியேறினர். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஹபீஸ் 87 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் மட்டும் எடுத்து நடையைக் கட்டினார். இதனால் அந்த அணியின் ரன் விகிதம் மிக மோசமானது.
இதன்பிறகு வந்தவர்களில் ஹமத் ஆஸம், உமர் அக்மல் ஆகியோர் தலா 30 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்வரிசையில் அப்ரிதி, சர்ஃப்ராஸ் அஹமது ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 200 ரன்களைக் கடந்தது.  22 பந்துகளைச் சந்தித்த அப்ரிதி ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. அஹமது ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார்.
237 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் நஜிமுதீன் 16, ஜகுருல் இஸ்லாம் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் தமிம் இக்பால் 68 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த நாசிர் ஹுசைனும், ஷகிப் அல்ஹசனும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றனர்.  அந்த அணி 170 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 63 பந்துகளைச் சந்தித்த ஹுசைன் 28 ரன்களில் வீழ்ந்தார். சிறிது நேரத்திலேயே ஷகிப் அல்ஹசனும் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய அவர் 72 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். அல்ஹசனின் விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
கடைசி 6 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 56 ரன்கள் தேவைப்பட்டன. உமர் குல் வீசிய 47-வது ஓவரில் வங்கதேச வீரர்கள் 3 பவுண்டரிகளை விளாச கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி வங்கதேசத்தின் வசம் திரும்புவது போல் இருந்தது.
ஆனால் 48-வது ஓவரில் மஸ்ரஃபி (9 பந்துகள் 18 ரன்கள்) ஆட்டமிழக்க வங்கதேசத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. கடைசி ஓவரில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. சீமா வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் வங்கதேசம் 5 ரன்கள் எடுக்க, கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  ஆனால் 5-வது பந்தில் அப்துர் ரசாக் போல்டு ஆனார். கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில், வங்கதேசத்துக்கு ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. அதனால் அந்த அணி 2 ரன்களில் தோல்வி கண்டது.
அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 32 ரன்கள் குவித்த அப்ரிதி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பங்களாதேஷின் ஷகிப் அல்ஹசன் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.