N

7.2.11

மண்ணெண்ணெய் கடத்தலால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு

பொது வினியோக திட்டத்துக்காக, மானிய விலையில் அரசு வழங்கும் மண்ணெண்ணெயை, அரசியல் பின்னணியுடன் செயல்படும் "ஆயில் மாபியா' கும்பல், வெளிநாடுகளுக்கு கடத்தி, பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. இந்த சட்ட விரோத செயலை தடுக்கும் அதிகாரிகள் உயிருடன் எரித்து கொல்லப்படுகின்றனர்.

ஏழை மக்களின் எரிபொருளாக கருதப்படுவது மண்ணெண்ணெய். நம் நாட்டை பொறுத்தவரை, மண்ணெண்ணெயை மட்டும் நம்பி, கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். குடிசைப் பகுதிகளிலும், கிராமங்களில் வசிப்பவர்களின் அன்றாட வாழ்வுக்கு மண்ணெண்ணெய் தான் உயிர் நாடியாக உள்ளது.மின்சார வசதி இல்லாத வீடுகளில், மண்ணெண்ணெயில் எரியும் விளக்குகள் தான் பயன்படுத்தப்படுகிறது. ஏழை மக்களின் வாழ்க்கை சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொது வினியோக திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு மண்ணெண்ணெயை மானிய விலையில் வழங்குகிறது மத்திய அரசு.ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 12.37 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு அரசு சார்பில் 19.60 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.பொது வினியோக திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ஒரு கோடி டன் மண்ணெண்ணெய் சப்ளை செய்யப்படுகிறது.

இவற்றில், ஆண்டுதோறும் 40 லட்சம் டன், மண்ணெண்ணெய், எண்ணெய் திருடும் தொழிலில் ஈடுபட்டுள்ள "ஆயில் மாபியா'க்களால் சட்ட விரோதமாக திருடப்படுகிறது.அரசால் மானிய விலையில் வழங்கப்படும் டீசல், மண்ணெண்ணெய் போன்றவை, பெட்ரோல் பம்ப்கள், டேங்கர்கள், பொது வினியோக திட்ட மையங்கள் ஆகியவற்றிலிருந்தும், ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு டேங்கர்களில் கொண்டு செல்லப்படும் போது, சட்ட விரோதமாக திருடப்படுகிறது. இந்த திருட்டுக்கு, சில நேரங்களில் ரேஷன் கடை நடத்துவோர், பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் ஆகியோரும் உடந்தையாக இருக்கின்றனர்.இவ்வாறு திருடப்படும் டீசல் மற்றும் மண்ணெண்ணெயில் "ஆயில் மாபியா' கும்பல் கலப்படம் செய்து, வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

அரசிடம் இருந்து மானிய விலையில் விற்பனை செய்யப்படும் மண்ணெண்ணெயை சட்ட விரோதமாக திருடி, அதிக விலை வைத்து, வெளிச்சந்தையில் விற்பனை செய்து விடுகின்றனர். இது தவிர, வங்கதேசம், நேபாளம், பூடான், இலங்கை போன்ற நாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்தி, மிகவும் அதிமான விலைக்கு விற்று, கொள்ளை லாபம் பெறுகின்றனர். இதுபோன்ற கள்ளச்சந்தை விற்பனையால், அரசுக்கு ஆண்டுதோறும் 16 ஆயிரத்து 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயில் மாபியா மண்ணெண்ணெயில் கடத்தல் மற்றும் கலப்படம் செய்யும் கும்பல்கள், வட மாநிலங்களில் அதிகம் உள்ளன. இந்த கும்பல், ஆயில் மாபியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. இவர்களுக்கு பெரிய அளவில் அரசியல் பின்புலம் உள்ளது.உள்ளூர் அரசியல்வாதிகள் துணையோடு இவர்கள் இந்த அராஜகத்தை அரங்கேற்றுகின்றனர். இதனால், அதிகாரிகள் இவர்களை தட்டிக் கேட்க முடியாது. அவ்வாறு தட்டிக் கேட்டாலும், அந்த அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை கொலை செய்யும் அளவுக்கு, கொடூரத்தை அரங்கேற்றுகின்றனர்.இதுபோன்ற ஆயில் மாபியா கும்பலை சோதனை நடத்த சென்ற உ.பி.,யை சேர்ந்த மஞ்சுநாத் என்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி, கடந்த 2005ல் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, தற்போது மகாராஷ்டிரா மாநிலம், மாலேகான் மாவட்ட உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனேவான், ஆயில் மாபியாக்களால் உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக இதுபோன்ற சட்ட விரோதச் செயல்கள் நடந்து வந்தாலும், மத்திய அரசோ, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ, எந்த ஒரு கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சோனேவான் கொலைக்கு பின்னர், ஆயில் மாபியாக்களுக்கு எதிராக, அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கலப்படம் மற்றும் கடத்தல் மண்ணெண்ணெய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஆயில் மாபியாக்களை அடியோடு ஒழிக்க, கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.அரசுக்கு ஏற்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட வேண்டும். அதுபோல், அப்பாவி அதிகாரிகள் கொல்லப்படுவதையும் தடுக்க வேண்டும். அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளால் மட்டுமே இது சாத்தியம்.

மலிவு விலை காரணமா?அரசு மானியம் வழங்குவதால், மண்ணெண்ணெய் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, குறைந்த விலையில் இவற்றை வாங்கி, அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது அல்லது வெளிநாடுகளுக்கு கடத்துவது என்பது ஆயில் மாபியாக்களுக்கு எளிதாக இருப்பதாக, அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, மண்ணெண்ணெய் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என, கிரீத் பரேக் தலைமையிலான கமிட்டி, கடந்தாண்டு அரசிடம் பரிந்துரை செய்தது. ஆனாலும், மண்ணெண்ணெய் விலையில் கை வைக்க அரசு மறுத்து விட்டது.

அண்டை நாடுகளில் :மண்ணெண்ணெய் விலை எவ்வளவு?
நம் அண்டை நாடுகளை ஒப்பிடும் போது, நம் நாட்டில் தான் மண்ணெண்ணெய் விலை மிகவும் குறைவாக உள்ளது.
இதுகுறித்து ஒரு ஒப்பீடு பட்டியல்:
நாடுவிலை ரூ. (ஒரு லிட்டர்)
பாகிஸ்தான் 37.48
வங்கதேசம் 28.00
நேபாளம் 40.64
இலங்கை 20.77
இந்தியா 13.00

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.