N

7.2.11

எதிர்க்கட்சிகளின் கூட்டு பேரணி டில்லிக்கு பயணமாகிறார் ஜெ.,

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய, மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள், தெலுங்கு தேசம் உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் சார்பில், டில்லியில் வரும் 9ம் தேதி கண்டன பேரணி மற்றும் போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்தில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா டில்லி செல்வார் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் தனது வைரியாக உள்ள தி.மு.க.,வையும், அதை தாங்கிப் பிடிக்கும் காங்கிரசையும் அரசியல் ரீதியாக, எதிர் கொள்ள தேசிய அரசியலில் கால்பதிப்பது அவசியம் என்பதை ஜெயலலிதா உணர்ந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட்டை முடக்கி எதிர்க்கட்சிகள் களம் அமைத்த போது, அதில் அ.தி.மு.க., முக்கிய பங்கு வகித்தது.ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதான போது, "மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க., திரும்பப் பெற்றால், ஆட்சியைக் காப்பாற்ற அ.தி.மு.க., தயாராக உள்ளது' என்று பரபரப்பு பேட்டியளித்து சமீபத்தில் தேசிய அரசியலை தன் பக்கம் திருப்பினார். தற்போது, முன்னாள் அமைச்சர் ராஜா கைது சம்பவத்திற்கு பிறகும், பார்லிமென்ட் கூட்டுக்குழு கோரிக்கையை அ.தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தும் என்பதில் ஜெ., உறுதியாக உள்ளார்.இந்நிலையில், பெட்ரோல், டீசல் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து, வரும் 9ம் தேதி டில்லியில் பேரணி நடக்கவுள்ளது.

மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் - தெலுங்கு தேசம் - மதச்சார்பற்ற ஜனதா தளம் -பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் இதில் பங்கேற்கின்றன. இவர்களோடு, அ.தி.மு.க.,- ம.தி.மு.க., ஆகிய கட்சிகளும் பேரணியில் பங்கேற்கவுள்ளன.சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பிரகாஷ் கராத் கடந்த 25ம் தேதி ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது டில்லியில் நடக்கும் பேரணி மற்றும் போராட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும் என, பிரகாஷ் கராத் அழைப்பு விடுத்துள்ளார்.

"முன்னாள் அமைச்சர் ராஜா கைது சம்பவத்திற்கு பிறகு டில்லி அரசியல் சூடு பிடித்துள்ளது. தற்போது டில்லியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியை விமர்சிக்க வாய்ப்பு கிடைக்கும். விலைவாசி உயர்வை கண்டித்து ஜெயலலிதா போராட்ட களத்தில் நேரடியாகக் குதிப்பது, தேர்தல் நேரத்தில் தமிழக மக்களிடம் வரவேற்பு பெறும் என, கூட்டணிக் கட்சிகள் கணக்கிட்டுள்ளன. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், விலைவாசி உயர்வு பிரச்னையை தேர்தல் பிரசாரத்தில் மையப் படுத்தி பேசுவதற்கும், தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.இதற்கு அச்சாரமாக டில்லி பேரணி மற்றும் போராட்டத்தில் ஜெ., பங்கேற்பார் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால், அவர் பங்கேற்க முடியவில்லை என்றால், அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை, மைத்ரேயன் ஆகிய இருவர் பங்கேற்பார் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.