N

14.3.11

திமுக கூட்டணி தேவையில்லை,இந்திய முஸ்லீம் லீக் மகளிரணித் தலைவி



இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட குறைந்தளவிலான தொகுதிகளிலிருந்து மீளவும் ஒரு தொகுதியைத் திமுக பெற்றுக் கொண்டதன் காரணமாக, அக் கூட்டணியில் இந்திய முஸ்லீம் லீக் தொடர்ந்தும் இணைந்திருக்கக் கூடாது என அக்கட்சியின் மகளிரணித் தலைவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அறிகையில்,  தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி இழுபறியில், தங்களுக்கு 63 இடங்களை தர வேண்டும் என்று காங்கிரஸ் கேட்க,  மற்ற கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கபட்ட இடங்களில் இருந்து சில தொகுதிகளை மீண்டும் பெற்று காங்கிரஸுக்கு வழங்கியுள்ளது தி.மு.கஃ

பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்களிலிருந்து ஒன்றை பெற்றும், முஸ்லீம் லீக்குக்கு ஒதுக்கப்பட்ட 3 இடங்களிலிருந்து ஒன்றை பெற்றும் காங்கிரசுக்கு 63 தொகுதிகளை தருவது என்ற முடிவுக்கு தி.மு.க வந்தது. காங்கிரஸ் கட்சி தி.மு.கவில் இடம் பெறுவதற்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை முஸ்லீம் லீக் கட்சி விட்டுக் கொடுத்ததை முஸ்லீம் லீக்கின் மகளிர் அணி தலைவி கண்டித்து கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது பற்றி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில மகளிரணி அமைப்பாளர் பாத்திமா முசப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

" தி.மு.க கூட்டணியில் தான் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தி.மு.க விடம் குறைந்த பட்சம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்காக 8 இடங்கள் கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்படி 8 தொகுதிகள் கிடைக்காத பட்சத்தல் 3 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்று முடிவானது. இந்த நிலையில், தி.மு.க கூட்டணியில் எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. உதயசூரியன் சின்னத்திலே போட்டியிடுவது என்றும் முடிவானது.

ஆனால், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே ஏற்பட்ட தொகுதி பங்கீட்டில் இழுபறி நடந்தது. அப்போது காங்கிரசுக்கு 3 தொகுதிகளை அதிகமான தர வேண்டும் என்ற நெருக்கடிக்கு தி.மு.க தள்ளப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க தங்களுக்கென்று ஒதுக்கிய தொகுதிகளை விட்டுக் கொடுக்காமல் எங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கிய தொகுதி எண்ணிக்கையில் இருந்து பறித்து காங்கிரசுக்கு கொடுத்துள்ளது.

இது சிறுபான்மை முஸ்லீம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது ஏன் நடந்தது என்பது பற்றி எங்களது தலைமை நிர்வாகிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இனி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கூடாது. எங்களுக்கே சொந்தமான ஏணி சின்னத்தில் போட்டியிட வேண்டும். எங்கள் கட்சியின் தலைவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி அவர் ராஜினாமா செய்யாத நிலையில் நாங்களே புதிதாக பதவி ஏற்போம். தி.மு.க வை தவிர்த்து ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம்." என  இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி தலைவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.