N

25.10.11

கடாபியின் உடல் இன்று அடக்கம்!!!

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆகி விட்டது. அவரது உடலை அடக்கம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மிஸ்ரதா நகர மக்கள் அவரது உடலை தங்கள் நகரில் அடக்கம் செய்யக் கூடாது என எதிர்க்கிறார்கள். கடாபி தனது சொந்த ஊரான சிர்த்தேயில் பிடிபட்டார்.

எனவே அவரது உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த நகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அவர் அடக்கம் செய்யப்படும் இடம் ஒரு நினைவாலயமாக மாறி விடக்கூடும் என்ற அச்சம் இடைக்கால அரசுக்கு உள்ளது. அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என உறுதியாக உள்ளது.

எனவே ரகசிய இடத்தில் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என கருதுகிறது. எனவே எந்த எங்கு அடக்கம் செய்வதில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் உடலை மிஸ்ரதா நகரில் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்துள்ளனர். அவரது உடலை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

வரிசையாக நின்று பார்த்து செல்கின்றனர். மக்கள் பார்க்க வசதியாக அறையின் கதவை திறந்து மூடுவதால் குளிர்பதனம் போதிய அளவில் இல்லை. எனவே கடாபியின் உடல் அழுகியது. இதனால் துர்நாற்றம் வீச தொடங்கி விட்டது. ஆகவே அவரது உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இடைக்கால அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது கடாபியின் உடலை இன்று பாலைவனத்தின் நடுவில் ரகசிய இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படுகிறது. அதில் இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த தகவலை இடைக்கால அரசின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.   இறுதி கட்ட போரின் போது கடாபியுடன் அவரது மகன் முட்டாசிம் கடாபியும் பிடிபட்டு சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தற்போது குளிர் பதனம் செய்யப்பட்ட அறையில் கடாபியின் உடலுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
 
இன்று கடாபி உடல் அடக்கம் செய்யப்படும் போது இவரது உடலும் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே இவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது குறித்து சிர்த் நகரில் உள்ள பழங்குடி இன தலைவர்களுடன் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடக்கிறது

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.