N

9.2.11

போலீஸ் காவலில் ராஜாவிடம் மேலும் 2 நாள் விசாரணை: சி.பி.ஐ.,க்கு கோர்ட் அனுமதி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு, சி.பி.ஐ., காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெகுரா மற்றும் சந்தோலியா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது குறித்த கேள்விகளுக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார் என்று கூறி, மேலும் நான்கு நாட்கள் வரை காவல் நீட்டிப்பை சி.பி.ஐ., தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே காவல் நீட்டிப்பை நீதிமன்றம் வழங்கியது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கடந்த 2ம் தேதி அன்று சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். ராஜாவோடு சேர்ந்து அவரது தனி செயலர் சந்தோலியாவும் தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுராவும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும், அடுத்தநாள் பாட்டியாலா கோர்ட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கு காவலில் எடுக்க சி.பி.ஐ., அதிகாரிகள் அனுமதி கோரினர். அப்போது ஐந்து நாட்களுக்கு காவலில் வைத்து விசாரித்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, மூன்று பேரையும் சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. சந்தோலியா மற்றும் பெகுரா ஆகிய இருவரிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் தங்களது கேள்விகளுக்கு ஓரளவு பதில்களை பெற முடிந்தது. ஆனால், ராஜாவிடம் போதிய அளவில் பதில்களை பெற சி.பி.ஐ., அதிகாரிகளால் இயலவில்லை என்று தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், நீதிமன்றம் அளித்த ஐந்துநாள் காவல் முடிந்துவிட்டதை அடுத்து, மூன்று பேரையும் மீண்டும் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்த சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று நடவடிக்கை எடுத்தனர். மதியம் ஒரு மணிக்கு சி.பி.ஐ., அலுவலகத்தில் இருந்து ராஜா, சந்தோலியா மற்றும் பெகுரா ஆகிய மூன்று பேரையும் வேனில் ஏற்றிக் கொண்டு பாட்டியாலா கோர்ட்டுக்கு விரைந்தனர். அங்கு ராஜாவை ஆஜர்படுத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், அவருக்கு மேலும் நான்கு நாட்கள் காவல் நீட்டிப்பு கோரினர். குறிப்பாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பவத்தில் பணப்பரிவர்த்தனை பெரிய அளவில் நடந்துள்ளது. அந்த பணம் கைமாற்றம் அடையப்பெற்ற விதம் குறித்த கேள்விகளுக்கு ராஜா இன்னும் சரிவர பதில் அளிக்கவில்லை. மிகவும் முக்கியமான அந்த தகவல்களை தருவதற்கு ராஜா மறுக்கிறார். எனவே, அவரிடம் மேலும் விசாரணை செய்வதற்கு நான்கு நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டுமென்று சி.பி.ஐ., வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது குறுக்கிட்ட ராஜா தரப்பு வழக்கறிஞர், "கடந்த ஐந்து நாட்களாக சி.பி.ஐ., தொடர்ந்து ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை எந்த அளவில் முன்னேற்றம் தெரிகிறது என்று கேட்டார். அதற்கு சி.பி.ஐ., தரப்பில்," இப்போது எதுவும் கூற முடியாது. அவ்வாறு கூறினால் வழக்கின் முன்னேற்றம் பாதிக்கப்படும்' என்று கூறினார். அதே சமயம், வழக்கு டைரியை கோர்ட்டில் ஆவணமாகத் தாக்கல் செய்திருப்பதை தெரிவித்தனர்.

இறுதியாக, ராஜாவை மேலும் இரண்டு நாட்களுக்கு காவலில் வைத்து விசாரித்துக் கொள்ள அனுமதி வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். ராஜாவுக்கு மட்டும்தான் காவல்நீட்டிப்பை சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டனர். சந்தோலியா மற்றும் பெகுரா ஆகிய இரண்டு பேருக்கும் காவல் நீட்டிப்பு கோரப்படவில்லை. இவர்கள் இருவரையும், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. மொத்தம் அரை மணி நேரம் மட்டுமே கோர்ட்டில் விவாதம் நடைபெற்றது. பின்னர், ராஜாவை மட்டும் அழைத்துக் கொண்டு சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். கடந்த வாரம் முதல்முறையாக ராஜாவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது போலீசாருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவங்கள் நேற்று நடைபெறவில்லை. மாறாக எல்லா ஏற்பாடுகளும் சரிவர செய்யப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட்டில் வரும் 10ம் தேதி( நாளை) ஸ்பெக்ட்ரம் வழக்கு வர வேண்டியுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சி.பி.ஐ., தரப்பில், கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தாக வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பண பரிமாற்றம் குறித்து விசாரணை: சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் "2ஜி' உரிமம் பெற்ற சில நிறுவனங்களின் பண பரிமாற்றம் தொடர்பான முக்கிய தகவல்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் சி.பி.ஐ.,க்கு தந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்தில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பான தகவல்களை அளிக்கும்படி, நிதி உளவுப் பிரிவு (எப்.ஐ.யு.,) அதிகாரிகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவுள்ளது. இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.